உருளைக்கிழங்கின் நன்மை, சமைக்கும் முறையிலே உள்ளது


உலகளவில் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படும்  உணவு உருளைக்கிழங்கு. பலவிதமான வகைகளில் சமைக்கப்படும் உருளைக்கிழங்கு சிறுவர் முதல் வயதானவர் வரை விரும்பி உண்ணும் உணவாகும்.

உருளைக்கிழங்கில்  கார்போஹைட்ரேட் நிறைந்து உள்ளதால் அதிக ஆற்றல் தரும்  உணவுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.   வேர் மற்றும் கிழங்கு  (roots and tubers)  குடும்பத்தில் மிக அதிகமான  புரதம்  கொண்டது  உருளைக்கிழங்கு.   ஆராய்ச்சியின்   போது, உயர்தர அமினோ அமில கலவையை   உருளைக்கிழங்கு   கொண்டு இருப்பதாகவும், பரிந்துரைக்கப்பட்டதை  விட அதிக  அமினோ அமில அளவுகள்  இருப்பதாகவும்  நிருபிக்கப்பட்டுள்ளது . அமினோ அமிலமான லைசின் பழுதான     தசைகளை  சரிசெய்வதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.
  
வைட்டமின் சி மற்றும்  பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாகவும், தையாமின், இரும்பு ஆகியவற்றின் மிதமான  ஆதாரமாகவும் திகழ்கிறது. தோலோடு சமைத்து உண்ணும் போது    வைட்டமின் சி    அதிகப்படியாக  கிடைக்கப்பெறுகிறது. ஆன்டிஆக்ஸிடண்ட்டுகளான   ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள்   வேகவைத்த உருளைக்கிழங்கு தோல்களில்  மிக அதிகமாக  உள்ளன. எனவே உருளையை தோலோடு சமைக்கும் முறையை தேர்வு செய்யுங்கள்.

உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கும்  உணவின் கலோரி,   தயாரிக்கும்  முறையையும், சமையலில்  சேர்க்கும் பொருட்களையுமே  சார்ந்துள்ளது.  அதிகமான    எண்ணெய், வெண்ணெய், நெய், சீஸ், மயோனைஸ், போன்ற  கொழுப்பு  நிறைந்த பொருட்கள் கொண்டு  தயாரிக்கப்படும் போது  உணவின் கலோரி மதிப்பை அதிகப்படுத்துகிறது. இதனாலே உருளைக்கிழங்கை தவிர்க்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். உருளை சிப்ஸ்,   உருளை ஃப்ரைஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது  உடலுக்கு கேடு விளைவிக்கின்றன

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக (ஒவ்வொரு கிண்ணத்திலும் 3 கிராம்) உள்ளது.   இது கரையக்கூடிய,  கரையமுடியாத   மற்றும் ரெஸிஸ்டண்ட்  நார் வகையை உள்ளடக்கியது. ஒவ்வொரு வகை  நார்சத்தும் நம்  உடலுக்கு  குறிப்பிட்ட நன்மைகளை தருபவை .

உருளைக்கிழங்கின்  நச்சு (toxin), க்லைகோ-அல்கலாய்டு  (glycoalkaloid),  முளை விட்ட  கிழங்குகளில் அதிகம் காணப்படுகிறது.  உருளைக்கிழங்கை , இருண்ட, குளிர்ந்த  இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நச்சு உருவாவதை குறைக்கலாம். சூரிய  ஒளி அதிகமாக படும் போது, உருளைக்கிழங்கு  பச்சை நிறமாக மாறுகிறது. இது அதிக அளவிலான நச்சு  சேர்ந்து உள்ளதை  குறிக்கலாம்.

சமையல் மூலம் க்லைகோ-அல்கலாய்டுகள்    அழிக்கப்படுவதில்லை என்பதால், பச்சைப் பகுதிகள் உள்ள  உருளைக்கிழங்கை  சமைத்து சாப்பிடுவது நல்லது அல்ல .

Comments

Popular posts